Saturday, August 31, 2013

தமிழகம்- தமிழர் விழாக்கள்



1.       தைப்பொங்கல்
2.       அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)
3.       இந்திர விழா
4.       கள்ளர் வெட்டுத் திருவிழா
5.       கூட்டாஞ்சோறு
6.       சித்திரைத் திருவிழா
7.       தமிழ்ப் புத்தாண்டு
8.       தைப்பூசம்
9.       பத்திரகாளி மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்
10.    பாரதம் படித்தல்
11.    புரவியெடுப்பு
12.    பூச்சொரிதல் திருவிழா
13.    வெறியாட்டு
14.    வேனில் விழா

1. தைப்பொங்கல்


அனுசரிப்பவர்கள்
தமிழர்
முக்கியத்துவம்
தமிழர்களின் அதிமுக்கிய திருநாள், இயற்கைக்கு நன்றி.
நாள்
தமிழ் நாட்காட்டி: தை 1
கொண்டாட்டங்கள்
பொங்கி பகிர்ந்து உண்ணல், உறவுகளை காணுதல்
மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா தைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.

1.1. தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்நோன்பைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த நோன்பை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, பகலவன், உதவிய கால்நடை, போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது.

1.2. உழவர் திருநாள்

பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

1.3. பொங்க வைக்கும் முறை

தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர். மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள் விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.

1.4. நான்கு நாள் திருவிழா

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.

1.4.1.போகி

போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
v  பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.
v  போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.

1.4.2. தைப்பொங்கல்

தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 

1.4.3. மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

1.4.4. காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.

1.5. பொங்கலை ஒத்த பிற விழாக்கள்

மேற்குநாடுகளில் பொங்கல் போன்றே ஒரு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.

1.6. சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல்

தைஇத் திங்கள் தண்கயம் படியும்என்று நற்றிணை
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்என்று புறநானூறு
தைஇத் திங்கள் தண்கயம் போலஎன்று ஐங்குறுநூறு
தையில் நீராடி தவம் தலைப்படுவாயோஎன்று கலித்தொகை

2. அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)

பச்சைப் பட்டுடுத்திய கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில்
அழகர் ஆற்றில் இறங்குதல் அல்லது கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் என்பது தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சைவ வைணவ ஒற்றுமைத் திருவிழாகும். இது மதுரை மாநகரில் வீற்றிருக்கும் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாணத் திருவிழாவுடன் இணைத்துக் கொண்டாடப் பெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுவாக தமிழில் முதல் மாதமான சித்திரை மாதப் பிறப்பை சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர்.


2.1. திருவிழா வழக்கம்
அழகர் கோவில்
சித்திரைத் திருவிழா மதுரையில் தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நாளில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மதுரையின் திருமாலிருஞ்சோலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் தம் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்குத் தாமதமாக வருகிறார். அதற்குள் மீனாட்சியின் திருமணம் முடிவடைந்து விடுகிறது. இதனால் கோபமடைந்த அழகர் வைகை ஆற்றில் நீராடிவிட்டு தங்கையைக் காணாமலே வீடு திரும்புகிறார். இந்த நிகழ்ச்சியே திருவிழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.

2.2. சமய ஒற்றுமையாக்கம்
இந்து சமயத்தில் பல்வேறு சமயப் பிரிவுகள் இருந்தாலும் சைவம், வைணவம் என இரு பிரிவுகளுக்கிடையில் பெரும் கருத்து வேறுபாடுகளும், ஒற்றுமையின்மையும் இருந்து வந்தது. சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையனவாக மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இரு சமயங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கோடு மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களையும் ஒன்றாக இணைத்து ஒரே விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும்படியாக விழா மாற்றியமைக்கப்பட்டது. மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், தான் வருவதற்குள் திருமணம் முடிந்துவிடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பிவிடுவதாகவும் புதிய கதையும் புனையப்பட்டது. ஆனால், மண்டூக மகரிசிக்கு சாபவிமோசனம் தரவே அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே பழைய புராணக்கதையாகும்.
3. இந்திர விழா
இந்திர விழா என்பது இந்திரனை சிறப்பிக்கும் வகையில் பழந்தமிழகத்தில் கொண்டாடப்பட்ட விழாவாகும். பசி, பிணி, பகை முதலியவற்றால் துன்பம் அடையாது இருத்தல் பொருட்டுத் தெய்வத்தைக் கருதிச் செய்யும் சாந்திப் பெருவிழாவே இந்திர விழாவாகும். இவ்விழாவைத் தீவகச் சாந்தி செய்தரு நன்னாள் என்று சாத்தனார் கூறுகின்றார்.
இவ்விழா புகார் என்ற நகரோடு அதிகம் தொடர்புற்றிருந்தாலும், மதுரையிலும் கொண்டாடப்பட்டது. இலக்கியங்களில் உவமை கூறும் அளவுக்கு இவ்விழா சிறப்பு பெற்றிருந்தது. தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் நாளேழ் நாளினு நன்கறிந்தீர் எனக்  குறிப்படுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

3.1. தமிழ் காப்பியங்களில் இந்திரவிழா

தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இதை தொடங்கினான். சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம்.

4. கள்ளர் வெட்டுத் திருவிழா

கள்ளர் வெட்டுத் திருவிழா என்பது தென்தமிழகத்தின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த திருவிழாவைக் காண ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி கிராமத்திலுள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் கூடுகிறார்கள். இந்தத் திருவிழாவானது தூத்துக்குடி மாவட்டம் குதிரைமொழியில், ஆண்டு தோறும் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.
4.1. வரலாறு
பள்ளர்களின் கோயிலில் முன்பொரு காலம் பொன் அணிகலன்களை மறவர்கள் திருடியதாகவும், அதன் விளைவாக அம்மறவர் குடும்பங்களில் பல இறப்புகளும், பாதிப்புகளும் நேர்ந்ததாகவும் அதற்காகவே இக்கள்ளர் வெட்டுத் திருவிழாவை மறவர்கள் விரும்பி நடத்துவதாகவும் தெரிகிறது. மறவர்கள் குதிரையில் வந்து பள்ளர்களின் கோயிலிலுள்ள பொன்னையும், பொருளையும் திருடிச் செல்லும்போது பள்ளர்கள் அதை கண்டு அவர்கள் மீது தாக்குதல் தொடுத்து, மறவர்களை வெட்டி வீழ்த்துவதாக இத்திருவிழா நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் வேறு சில இடங்களிலும் கள்ளர் வெட்டுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் கருப்பொருளை மறைத்து புதிய பொருள் கற்பிக்கின்ற போக்குகளும் அண்மைக்காலங்களில் இருக்கின்றன.
4.2. திருவிழா
கோயிலின் முன்னே உள்ள தேரிப்பகுதியில் மேல்புறம் சவுக்கு கட்டைகள் மூலம் பாதுகாப்பு அரண் அமைத்து அதில் கள்ளர் எனும் இளநீரை வைத்து நாலாபுறமும் பக்தர்களின் நடுவே வெட்டப்படும். பின்பு பக்தர்கள் அங்கிருந்து புனித மண் எடுத்துச் செல்கின்றனர்.

5. கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறு என்பது கூட்டாகச் சேர்ந்து சோறாக்கி உண்ணும் ஒரு விழா.
5.1. பிள்ளைகள்
குழந்தைகள் இவ்வாறு பெரியவர்கள் உண்பதை விளையாக நடித்து விளையாடுவதும் உண்டு. இதனைச் சில பிள்ளைத்தமிழ் நூல்கள் சிறுசோறாக்கல் என்னும் பருவமாக வைத்துப் பாடல்கள் பாடியுள்ளன.
5.2. விழாக்கள்
முனியனார் போன்ற படைப்புத் தெழ்வங்களை வழிபடும்போது பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரே பொங்கலாக வைத்துப் படைத்துக் கூட்டாக உண்ணும் வழக்கம் நாட்டுப்புறங்களில் உண்டு. இது கூட்டாஞ்சோறு பழக்கத்தின் எச்சமிச்சம்.
5.3. அரசன்
அரசன் பெருஞ்சோறு வழங்குவது இதனோடு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று.
ஆண்டாள் தன் தோழிமாரோடு கூடிக் கூட்டாஞ்சோறு உண்டதைக் குறிப்பிடுகின்றாள்.
“ பாற்சோறு
 மூடநெய் பெய்து முழங்கை வழி வார
 கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” - திருப்பாவை 27

6. சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்கு முன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.
6.1. மதுரை சித்திரைத் திருவிழா
மதுரையில் சித்திரைத் திருவிழா சைவத் திருவிழா, வைணவத் திருவிழா என சமயங்கள் தொடர்புடையதாகவே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரு விழாவாக ஆக்கினார். இதனால் தேனூரில் வைகை ஆற்றில் இறங்கி வந்த அழகர் ஆற்றில் இறங்கும் விழா, மதுரையில் வைகை ஆற்றில் இறங்கும்படியான விழாவாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக, மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கு சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.
6.2. வீரபாண்டி சித்திரைத் திருவிழா
தேனி அருகிலுள்ள வீரபாண்டியிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலிலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க் கிழமை தொடங்கி மறு செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறுகிறது.

7. தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
7.1. புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். தை முதல் நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.
7.2. கருத்து வேறுபாடுகள்
2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.
ஆகஸ்ட் 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது. அதற்கு 2006-2011 வரை இருந்த தமிழக அரசை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment